Literary Works

#இயற்கை_365 #106

#இயற்கை_365 #106

இதைவிட, எந்த ஒரு மரமும், இத்தனை கனிகளைத் தருவதில்லை என்ற தனிச்சிறப்பு பெற்ற அரிநெல்லிக்காயின் தாவரப் பெயர் Phyllanthus acidus.
தோன்றிய இடம்: மடகாஸ்கர்..

Malay Gooseberry, Country Gooseberry, Wild Plum என அழைக்கப்படும் இந்த நாட்டு நெல்லிக்காய் நட்சத்திர நெல்லி, அரிநெல்லி, அருநெல்லி, அரைநெல்லி என்ற தமிழ்ப் பெயர்களால் அழைக்கப்படுகிறது..

வீட்டின் பின்புறம் அல்லது கிணற்றின் ஓரமாக இருக்கும் சிறிய மரத்தின், மெல்லிய கிளைகளில், கொத்து கொத்தாக காய்க்கும் இந்த புளிப்புப் பழங்கள் சிறுவயது நினைவுகளை பெருமளவு தூண்டுகின்றன..

புளிப்பான அரைநெல்லிக்காய்களை, போட்டி போட்டுக் கொண்டு, எட்டிப் பறித்து, உப்பு மிளகாய்த்தூள் தூவி உண்ட விடுமுறை நாட்கள் இன்றும் இனிக்கின்றன..

அரிநெல்லிக்காய் என்பது மலை நெல்லியின் சிறிய வடிவமல்ல என்றாலும், இதன் இலை, வேர் மற்றும் கனிகளில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன..

Journal of Integrative Medicine மற்றும் European Journal of Pharmacology
ஆகியவற்றில் அரிநெல்லியின் பயன்கள் குறிப்பிடப்பட்டுள்ளன..

குறைந்த கலோரிகள் (28/100g), அதிக நீர்த்தன்மை (91%), அதிக நார்ச்சத்து, அதிகளவு வைட்டமின் சி மற்றும் பி, கால்சியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், இரும்புச்சத்து ஆகியன நிறைந்தவை அரைநெல்லி..

Adenosine, Caffeic acid, Gallic acid, Kaempferol, Tannins, Saponins ஆகிய தாவரச்சத்துகள் உள்ளவை அரிநெல்லி..

குடலில் உள்ள நச்சுக்கழிவுகளை வெளியேற்றுகிறது அரிநெல்லி..

சிறுநீர்ப் பெருக்கியாக விளங்கும் அரிநெல்லிக்காய், நோயெதிர்ப்பு சக்தி, சரும பாதுகாப்பு, இரத்த சுத்திகரிப்பு, ஞாபகத்திறன் அதிகரிப்பு ஆகிய திறன்களும் கொண்டவை..

நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள், சிறுநீர்த் தொற்று, எலும்புப்புரை, நரம்பு தளர்ச்சி, புற்றுநோய் ஆகியவற்றின் நோய்த்தாக்கத்தை குறைக்க வல்லவை அரிநெல்லி..

அரிநெல்லி பசியைக் கூட்டுகின்றன.. செரிமானத்திற்கு உதவுகின்றன..
உடற்பருமன், மலச்சிக்கல், மூலநோய்க்கு அருமருந்தாகின்றன..

அலர்ஜி, ஆஸ்துமா, Cystic Fibrosis ஆகிய நுரையீரல் நோய்களுக்கும் பாதுகாப்பு அளிக்கின்றன..

தோல், நகம் மற்றும் முடி வளர்ச்சிக்கு உதவும் அரிநெல்லி, அம்மை தழும்புகளைக் குறைப்பதுடன் தோல் அரிப்பையும் குறைக்கிறது..

சிறுநெல்லியின் விதைகள் வயிற்று வலி மற்றும் மலச்சிக்கலுக்கு பெரிதும் உதவுகிறது..

இதன் இலைகள் எடைக் குறைப்பிற்கு பெரிதும் உதவுகின்றன..
பாலியல் நோய்களுக்கு மருந்தாகவும், மூட்டு வலி வீக்கத்திற்கு மேல்பூச்சாகவும் பயன்படுத்தப்படுகின்றன..

Disclaimer: இதன் அதிகமான அமிலத்தன்மை காரணமாக, வயிற்று அழற்சி உள்ளவர்கள் அரிநெல்லியை தவிர்ப்பது நல்லது..

அரிநெல்லிக்காய், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிழக்காசிய நாடுகளுக்கு கொண்டு வரப்பட்டு, இந்தியா, இந்தோனீசியா, வியட்நாம், லாவோஸ், மலேசியா ஆகிய நாடுகளில் பெருமளவு காணப்படுகிறது..

ஈர நிலத்தில் நன்கு விளையும் அரிநெல்லி, தென்னிந்தியாவில் ஏப்ரல், மே மாதங்களிலும், ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களிலும் என வருடத்தில் இருமுறை காய்க்கின்றன..

ஊறுகாய் தயாரிக்க நம்மிடையே பயன்படும் அரிநெல்லியை, இந்தோனீசியா மற்றும் பிலிப்பைன்ஸில் உணவாகவும், உணவு பதனிடவும் பயன்படுத்துகின்றனர்..

மலாய் மற்றும் பஹாய் மக்கள் இதிலிருந்து வினிகர், சட்னி, ஜூஸ், ஜாம், ஜெல்லி, கேக் ஆகியவற்றைத் தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர்..

Fruit Cermai என்ற அரைநெல்லியில் இனிப்பும் புளிப்பும் சேர்ந்த பதார்த்தங்கள், ப்ரூனே மற்றும் மலேசியாவில் பிரபலமானவை..

ஆரோக்கியம் மட்டுமன்றி, உலகெங்கிலும் குழந்தைகளுக்கு பிடித்தமான மரம் என்ற பெருமையும் கொண்டது அரிநெல்லி..

வியாபார ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெறாத காரணத்தால், சிறுநெல்லி சிறிது சிறிதாக அழிந்து வருகின்றன என்பதும் வலிக்கும் உண்மை..!!

#இயற்கை_365