#இயற்கை_365 #107
#இயற்கை_365 #107
மனிதனால் அதிகம் உட்கொள்ளப்படும் காய் மற்றும் கனி என்ற தனிச்சிறப்பு பெற்ற கொய்யாவின் தாவரப் பெயர் Psidium guajava.
தோன்றிய இடம்: மெக்சிக்கோ..
காய் துவர்க்கும்..
கனி இனிக்கும்..
ஆனால் இரண்டுமே ஆரோக்கியம் அனைத்தையும் தரும் என்ற சிறப்பும் மிக்கது கொய்யா..
Guava என அழைக்கப்படும் கொய்யா, Guayabo என்ற ஆரவாக் மொழியிலிருந்து வந்த சொல்லாகும்..
Bayabas, Payara, Amrood என்ற பெயர்களாலும் கொய்யா அழைக்கப்படுகிறது..
அம்ரூத் என்றால் அரபி மொழியில் பேரி போன்ற வடிவம் என்ற பொருளாகும்.. அமிர்தத்தை போன்ற சுவை கொண்டது எனவும் பொருள் தருகிறது..
மஞ்சள், சிவப்பு, இளஞ்சிவப்பு என ஈர்க்கும் நிறங்களில் காணப்படும் கொய்யா, இதன் தனிச்சுவை மற்றும் மணத்தால், பழங்களின் இராணி என அழைக்கப்படுகிறது..
கொய்யாவின் காய், கனி, இலை, விதை என அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை..
அதிக கலோரிகள் (68/100g), அதிக நார்ச்சத்து, அதிக நீர்த்தன்மை மற்றும் அதிகளவில் அத்தியாவசிய தாதுப் பொருட்கள் ஆகியன நிறைந்தவை கொய்யா..
தக்காளியைக் காட்டிலும் இருமடங்கு Lycopene அதிகமாகவும், ஆரஞ்சைக் காட்டிலும் பலமடங்கு வைட்டமின் சி அதிகமாகவும் கொண்டது கொய்யா..
மேலும் இதில் வைட்டமின்கள் A, B, E, K, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீஸ், காப்பர், மற்றும் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் ஆகியனவும் உள்ளன..
Leucocyanidin, Gallocatechin, Linoleic acid, Oleic acid, Palmitic acid ஆகிய தாவரச்சத்துகள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் கொண்டவை கொய்யா விதைகள்..
நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், இருதய நோய், உடற்பருமன், வயிற்றுப்போக்கு, குடல் அழற்சி ஆகியவற்றில் பயனளிக்கிறது கொய்யா..
கொய்யாக்காயின் சதைப்பகுதி வயிற்றுப்போக்கிலும், இதன் விதைகள் மலச்சிக்கலும் உபயோகப்படுத்தப் படுகின்றன..
ஞாபகத்திறனை அதிகரிக்க உதவும் கொய்யா, நரம்புத்தளர்ச்சி, அல்சைமர் மற்றும் பார்க்கின்சன் நோய்களில் பயன்படுத்தப்படுகிறது..
மார்பக, குடல் மற்றும்
வாய்ப்புற்றுநோயில் இருந்து கொய்யா பாதுகாப்பு அளிக்கும் என ஆரம்பநிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன..
கொய்யாவின் காப்பர் அளவு தைராய்டு ஹார்மோன்களை கட்டுப்படுத்துகிறது..
பெக்டின்கள் அளவு கர்ப்பப்பை மற்றும் சினைப்பை ஹார்மோன்களை கட்டுப்படுத்துகிறது..
நோயெதிர்ப்பு சக்தி, பார்வைத்திறன் அதிகரிப்பு, சரும பாதுகாப்பு, எலும்பு மற்றும் தசைகளுக்கு வலிமை, வயோதிக நோய்களிலிருந்து பாதுகாப்பு என பல்வேறு ஆற்றல்கள் கொண்டது கொய்யா..
கடித்து உண்பதால் ஈறுகளுக்கும், பற்களுக்கும் வலிமை கூடும் என்பதால், கொய்யாவை "அப்படியே சாப்பிட அழைக்கிறது" Indian Journal of Nutritive Medicine..
Disclaimer: அதிக அமிலத்தன்மை காரணமாக, வெறும் வயிற்றில் கொய்யாச்சாறினை உட்கொள்ளக் கூடாது..
கொய்யா பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதனோடு ஒன்றாக கூடி வாழ்கின்ற தாவரமாகும்..
தனிமணமும், பச்சை நிறத் தோலுக்குள்ளே வெண்மை அல்லது இளஞ்சிவப்பு நிற சதைப்பற்றும், அதனுள் நிறைந்த விதைகளும் கொண்ட கொய்யாப் பழங்களை, பறவைகளும், மனிதர்களும் உலகெங்கும் பரவச் செய்துள்ளனர்..
பாகிஸ்தான் நாட்டின் குளிர்கால தேசிய பழமாக, கொய்யா கொண்டாடப்படுகிறது..
பிரேசிலில், கொய்யா_சீஸ் சேர்ந்த Goibada என்ற உணவினை ரோமியோ ஜூலியட் என்றே அழைக்கின்றனர்..
மெக்சிக்கோ நாட்டில் கொய்யாவை இனிப்பு வகைகள், பழச்சாறு, ஐஸ்கிரீம், மதுபானங்கள் என அனைத்திலும் பயன்படுத்துகின்றனர்..
Agua fresca என்ற கொய்யாப் பழச்சாறு இங்கு பிரபலமான ஒன்றாகும்..
சிவப்பு நிற கொய்யா தக்காளிக்கு பதிலாக சாஸ், கெட்ச் அப் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது..
ஜாம், ஜெல்லி, மெர்மலேட் ஆகியனவும் இதிலிருந்து தயாரிக்கப்படுகிறது..
கொய்யா இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் தேநீர் மருத்துவ குணங்கள் நிறைந்ததால் பிரேசில் மற்றும் சீனாவில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது..
கொய்யா விதைகளிலிருந்து பெறப்படும் எண்ணெய், அழகு சாதனப் பொருட்களில் சேர்க்கப்படுகிறது..
வருடத்தில் ஏறத்தாழ மூன்று மில்லியன் டன் கொய்யாவை உற்பத்தி செய்து, உலகளவில் முன்னிற்கின்றது இந்தியா..
பிரயாணத்தின் போது, வண்டிகளில் அடுக்கடுக்காக காணப்படும் கொய்யாவும், அதனுடன் சேர்த்த உப்பு மிளகாய்த்தூளும் பயணங்களையும், நம் நினைவுகளையும் இனிதாக்குகின்றன..
#இயற்கை_365