#இயற்கை_365 #109
#இயற்கை_365 #109
அடர் பச்சை இலைகளுக்கிடையே, அடுக்கடுக்காக பூத்து நிற்கும் வெள்ளைப் பூக்களைக் கொண்ட, "நம்ம வீட்டுச் செடியான" நந்தியாவட்டையின் தாவரப் பெயர் Tabernaemontana divaricata.
தோன்றிய இடம்: இந்தியா..
Pinwheel flower, Moon Beam, Creep Jasmine, Carnation of India, East Indian Rosebay, Nero's crown என்ற பல்வேறு பெயர்களால் வழங்கப்படும் நந்தியாவட்டையை, சந்தினி, நந்தியார்வர்த்தனம், வத்துசுத்தா எனவும் அழைக்கின்றனர்..
இலைகள் மற்றும் பூக்களைப் பறிக்கும் போது, அவற்றின் காம்பு அல்லது நுனியில் பால் வருவதால், Milk Flower எனவும் அழைக்கப்படுகிறது..
"கண் எரியுதா..
நந்தியாவட்டையை கொஞ்ச நேரம் கண்ணு மேலே வைச்சுக்கோ.." என ஒவ்வொரு தூக்கமற்ற இரவுக்குப் பின், அம்மா தந்த மருத்துவக் குறிப்பு உண்மை என்கிறது அறிவியல்..
ஆம்..
99 வகையான கண் நோய்களுக்கு மருந்தாகத் திகழ்கிறது நந்தியாவட்டை என்கிறது Indian Pharmacopoeia..
வாசமில்லாத வெள்ளைப் பூக்களைக் கொண்ட நந்தியாவட்டம்,
அடுக்கு அல்லது பெரு நந்தியாவட்டம் எனவும்
ஒற்றை நந்தியாவட்டம் என இருவகைப்படும்..
சில பூக்கள் மட்டும் வாசனையுடன் கூடியவை.
நந்தியாவட்டையின் வேர், பூக்கள், இலைகள் மற்றும் அதிலிருந்து வடியும் பால் என அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை..
Kaempferol, Campesterol, Stigmasterol, Loganin ஆகிய தாவரச்சத்துகள் கொண்ட நந்தியாவட்டை பூக்களில், Tryptophan, Cystine போன்ற அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன..
நந்தியாவட்டை வேர்களிலும், இலைகளிலும் Alkaloids, Flavanoids, Glycosides, Triterpenoids, Saponins ஆகிய கரிம அமிலங்கள் மற்றும் தாவரச்சத்துகள் காணப்படுகின்றன..
கண் எரிச்சல் மற்றும் கண் சம்பந்தப்பட்ட நோய்களிலும், தோல் வியாதிகளிலும், நந்தியாவட்டைப் பூக்கள் பயனளிக்கும்..
கண்களில் ஏற்படும் எரிச்சல் குணமாக நந்தியாவட்டைப் பூவால் ஒத்தடம் கொடுக்கப்படுகிறது..
பூக்களை சுத்தமான தண்ணீரில் இடித்து சாறு பிழிந்து கண்களில் விடுவதால் கண்நோய்கள் நீங்கி கண்பார்வையும் கூர்மையாகும் என்கிறது ஆயுர்வேத மருத்துவம்..
ஞாபகத்திறனை அதிகரிக்கும் ஆற்றல் கொண்ட நந்தியாவட்டை இலைகளை, நரம்பூக்கியாக தாய்லாந்தில் பயன்படுத்துகின்றனர்..
கசப்பும், துவர்ப்பும் சேர்ந்த சுவை கொண்ட வேர்கள், வயிற்று வலி,
வயிற்றுப் பூச்சிகள், விஷமுறிவு, பற்சிதைவு, பக்கவாதம், சிறுநீர்த் தொற்று, மூட்டு நோய் ஆகியவற்றில் வேர்கள் பயன் தருகின்றன..
பற்சிதைவு, ஈறுகளின் வீக்கத்தை குறைக்க வல்லது இதன் வேர்களை
வேம்பு போல, பல்துலக்கப் பயன்படுகின்றனர்..
நந்தியாவட்டை இலை மற்றும் தண்டுகளில் உள்ள பால் குளிர்ச்சியைத் தரும்..
மூட்டுவலி, தசைப்பிடிப்பு மற்றும் வீக்கத்திற்கு மேல்பூச்சாகவும், புண்களில் ஏற்படும் நீர்க்கசிவுகளிலும், இது பயன்படுத்தப்படுகிறது
நந்தியாவட்டையில் உள்ள Conolidine என்ற கரிமப் பொருள் மார்ஃபீன் போன்ற போதை மருந்தைக் காட்டிலும் மிகச் சிறந்த வலி நிவாரணியாகத் திகழ்கிறது..
வலியையும், வீக்கத்தையும் குறைக்கும் ஆற்றல் கொண்ட இதனை
சீன, தாய்லாந்து நாடுகளின் இயற்கை மருத்துவத்தில் பெரிதும் பயன்படுகின்றனர்..
மிகச்சிறந்த வலி நிவாரணியாக இருந்தாலும், ஓபிய மருந்துகளின் பக்கவிளைவுகள் எதுவும் இல்லாததால், Conolidine பற்றிய ஆய்வுகளை, தீவிரமாக மேற்கொண்டுள்ளது சிட்னி பல்கலைக்கழகம்..
வளமான எல்லா இடங்களிலும், அடர்த்தியாக வளரக்கூடிய நந்தியாவட்டை, செடியினத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும்..
இந்தியா முழுவதிலும் காணப்படும் நந்தியாவட்டை
பூஜைக்கு உரியது என்பதால், திருக்கோயில் நந்தவனங்களிலும், வீட்டுத் தோட்டங்களிலும் இவை பெரிதும் வளர்க்கப்படுகின்றது..
சீனர்கள் இதனை மருத்துவ குணங்களுக்காக பெருமளவு வளர்க்கின்றனர்..
மேற்கு ஆப்பிரிக்காவில் அழகுப் பூஞ்செடியாக வளர்க்கிறார்கள்.
"தந்திபோ லேதெறிந்துச் சாறு மண்டை நோயகற்றும்
நந்தியா வட்டப் பூ நன்று.."
என்ற தேரையர் குணப்பாடலில், பலவகையான நோய்களிலிருந்தும் காக்கும் நந்தியாவட்டப் பூ, நல்லதொரு பூவாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது..
நந்தியாவட்ட மாலையணிந்து, பாரதப் போருக்குப் புறப்பட்ட துரியோதனன், நந்தியாவட்டத்தாமன் என்றே அழைக்கப்பட்டான்..
சங்ககால மகளிர் குவித்து விளையாடியதாகச் சொல்லப்பட்டுள்ள, தொண்ணூற்று ஒன்பது மலர்களில் 'நந்தி' என்னும் பெயரால் நந்தியாவட்டை மலர் குறிப்பிடப்பட்டுள்ளது..
வருடம் முழுவதும் பூக்கும் பூ..
தூய்மையான, வெண்ணிறப்பூ.. கோவில்களில் பெரிதும் வளர்க்கப்படும் பூ..
கடவுளுக்கு அதிகம் சாற்றப்படும் பூ..
என்ற நந்தியவட்டையில், அனைத்து மூலிகை வளங்களும் நிறைந்தே காணப்படுகின்றன..
#இயற்கை_365