Literary Works

#இயற்கை_365 #112

#இயற்கை_365 #112

தாவரங்களில் தாயைக் காட்டிலும் சிறந்ததாகக் கருதப்படும் கடுக்காயின் தாவரப் பெயர் Terminalia chebula.
தோன்றிய இடம்: இந்தியா.

பாட்டி வைத்தியத்தில், குழந்தைகளின் பசியின்மை, வயிற்று வலி, தொடர் அழுகை ஆகிய அனைத்திற்கும் அபயக் கரங்கள் நீட்டுகின்ற கடுக்காயின் மற்றுமொரு பெயர் Abhay..!!

இவற்றின் நிறம் மற்றும் தோற்றத்தைப் பொறுத்து, கருங்கடுக்காய், செங்கடுக்காய், வரிகடுக்காய், பால்கடுக்காய் என கடுக்காய்கள் வகைப்படுத்தப் படுகின்றன..

"அப்யதா" என பண்டைய இலக்கியங்களில் அழைக்கப்பட்ட கடுக்காய்க்கு,
வலி நிவாரணி என்ற பொருளும் உண்டு..

மிகச்சிறந்த மருத்துவ குணங்கள் கொண்ட பொருட்களாக, சித்த மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படும் தாவரங்களுள் கடுக்காயும் ஒன்று..

Haritaki, Harad என்ற கடுக்காய்க்கு, விஜயன்,
அபயன், அமுதம், ரோகிணி, ஜெயந்தி ஆகிய முக்கிய மாற்றுப் பெயர்களும் உண்டு..

கடுக்காயின் 
முக்கியமான சுவை, துவர்ப்பாகும். அறுசுவைகளில் உவர்ப்புச் சுவை தவிர, மற்ற சுவைகள் அனைத்தும் கடுக்காயில் உள்ளது.. துவர்ப்புச்சுவையே 
இரத்தத்தை விருத்தி செய்வதாகும்.

துவர்ப்பு சுவை அதிகம் கொண்ட, இளம்கடுக்காயின் தோல் மற்றும் சதைப்புற்று, மருத்துவ குணங்கள் நிறைந்தது..

வைட்டமின்கள் C, E நிறைந்த கடுக்காயில்
Chebulagic acid, Chebulinic acid, Terflavin, Tannins, Flavanols, Ellagic acid, Glycosides, Selenium ஆகிய தாவரச்சத்துகளும் நிறைந்துள்ளன..

கடுக்காய் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது..
பசியின்மையைப் போக்குகிறது..
இரத்த சோகையைக் குணப்படுத்துகிறது..
உடலின் நச்சுப்பொருட்களை வெளியேற்றச் செய்கிறது..

இருதய நோய், இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், வயிற்றுப் புண், குடல் அழற்சி, காமாலை, கல்லீரல் நோய்கள், சிறுநீர்த் தொற்று, மூட்டு வீக்கம் ஆகியவற்றில் கடுக்காய் பயனளிக்கும்..

காயங்களை ஆற்றி, தழும்புகள் மறையவும் உதவுகிறது கடுக்காய்ப் பொடி..

மேலும் மன அழுத்தம், தூக்கமின்மை, வயோதிக நரம்புத் தளர்ச்சி, கண்நோய்கள், பற்சிதைவு, ஈறுகள் வீக்கம், சளி, இருமல், ஆஸ்துமா ஆகியவற்றையும் கடுக்காய் போக்கும்..

தோலின் சுருக்கங்களை நீக்கி, நீர் வறட்சியைப் போக்குவதுடன் சரும நோய்களுக்கும் பாதுகாப்பு அளிக்கிறது கடுக்காய்..

தீப்புண்கள், ஆறாத புண்களான சர்க்கரை நோய்ப் புண், வெரிக்கோஸ் நாளப் புண், படுக்கைப் புண் ஆகியவற்றிற்கு கடுக்காய்ப் பொடி பயனளிக்கும்.

Disclaimer: கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் கடுக்காய் உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது..

"கடுக்காய்க்கு அக நஞ்சு, சுக்குக்கு புற நஞ்சு.." என்கிறது சித்தர் பாடல். கடுக்காயின் கொட்டையில்
நச்சுத்தன்மை உள்ளதால் தோல் மற்றும் சதைப்பகுதியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்..

கடுக்காய்க்கு அமுதம் 
என்றொரு பெயரும் உண்டு..

தேவர்கள் பாற்கடலைக்கடைந்தபோது, சிந்திய ஒரு துளி அமிர்தம், கடுக்காய் மரமாக உருவெடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன..

உடல், மனம், ஆன்மா 
ஆகிய மூன்றையும் 
தூய்மை செய்யும் 
வல்லமை கடுக்காய்க்கு உண்டு 
என்று குறிப்பிடுகிறார்திருமூலர்..

"பெற்ற தாயை விட கடுக்காயை ஒருபடி 
மேலானது என்று கருதுகின்றனர் 
சித்தர்கள். 

"காலை இஞ்சி 
கடும் பகல் சுக்கு 
மாலை கடுக்காய் 
மண்டலம் உண்டால் 
விருத்தனும் பாலனாமே"
என்பது சித்தர் பாடல்..

காலையில் இஞ்சி, மதியம் சுக்கு, இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) உண்டால் கிழவனும் குமரனாகலாம் என்பதேஇந்தப் பாடலின் கருத்தாகும்..

வடமொழியில், Haritaki என அழைக்கப்படும் கடுக்காய், "மருத்துவர்களின் காதலி" என்றும், "மருந்துகளில் அரசன்" என்றும் குறிப்பிடப்படுகிறது..

"திரிபலா" என்பது சித்த மருத்துவத்தில் புகழ்பெற்ற ஒரு கூட்டு மருந்தாகும். இதில் கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் என்ற மூன்றும் சேர்க்கப்படுகின்றன..
பல்வேறு நோய்களுக்கு இது மருந்தாகிறது என்பதை மருத்துவ அறிவியலும் உறுதிப்படுத்துகிறது..

மரவகையைச் சார்ந்த கடுக்காய், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, ஒடிசா, ஆந்திரம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் அதிகம் காணப்படுகிறது.

தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய காடுகளில் அதிகம் உள்ளன. சேலம் மாவட்டத்தில் உற்பத்தியாகும். கடுக்காயே மிகவும் உயர்ந்த தரமுடையவை.

நோயற்ற வாழ்வுக்கு வழிவகுக்கும், துவர்ப்பு மிக்க கடுக்காயை உட்கொண்டு நலம் பெறுவோம்..

#இயற்கை_365