#இயற்கை_365 #113
#இயற்கை_365 #113
"தகதகன்னு தங்கம் மாதிரி முகம் மின்னுமா..?
இதை சாப்பிடுங்க.."
என பரிந்துரைக்கப்படும் கரிசலாங்கண்ணியின் தாவரப் பெயர் Eclipta alba.
தோன்றிய இடம்: இந்தியா..
False Daisy, Tatoo plant, Bhringraj என அழைக்கப்படும் கரிசலாங்கண்ணிக்கு, கையாந்தரை, கையான், கரப்பான், கரிசாலை என வேறு பெயர்களும் உண்டு..
முடி வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுவதால், கரிசலாங்கண்ணி, Bhringraj, King of Hair என்றே அழைக்கப்படுகிறது..
கரிசலாங்கண்ணி எண்ணெய் தேய்த்துக் குளிக்க, தலைமுடி உதிர்தல் முற்றிலும் தடைபடும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே..
ஆனால், அதுமட்டுமின்றி அனைத்து மருத்துவ குணங்களும் நிறைந்தது கரிசலாங்கண்ணி..
கரிசலாங்கண்ணியில் நான்கு வகைகள் உள்ளன. வெள்ளை மற்றும் மஞ்சள் நிற கரிசலாங்கண்ணி அனைத்து இடங்களிலும் காணப்படும்..
அவற்றுள் மஞ்சள் பூ பூக்கும் வகைதான் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
கரிசல் என்றால் தங்கம் என்று ஒரு பொருள் உண்டு. இது உடலைத் தங்கம் போல ஆக்கும் என்பதால் கரிசலாங்கண்ணி என அழைக்கப்பட்டதாம்..
ஈரமான நிலத்தில் வளரும் இயல்புடைய கரிசலாங்கண்ணி, வாய்க்கால் மற்றும் வயல் வரப்புகள், சாலையோரங்களில் களைச்செடியாக காணப்படும் மூலிகைச் செடியாகும்..
கரிசலாங்கண்ணியின் முழுத் தாவரமும் மருத்துவ குணங்கள் நிறைந்தது..
அதிகளவு நீர்ச்சத்து (85%), குறைந்த கலோரிகள், குறைந்த மாவுச்சத்து உள்ள இதில் வைட்டமின்கள் A, C, E, K மற்றும் கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், செலீனியம், மாங்கனீஸ் ஆகிய கனிமங்களும் உள்ளன..
Ecliptine, Alpha Amyrin, Apigenin, Sitosterol, Triterpenes, Flavanols, Polyacetylene, Coumarins and Alkaloids போன்ற தாவரச்சத்துகளும் கொண்டது கரிசலாங்கண்ணி..
மேலும் இதில் தங்கச் சத்து உள்ளதால், பொற்றிலை என்றும் பொற்கொடி என்றும் அழைக்கப்படுகிறது..
முடியின் வேர்க்கால்களுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால், முடி வளர்ச்சிக்கு கரிசலாங்கண்ணி எண்ணெய் பெரிதும் உதவுகிறது..
முடியின் வேர்க்கால்களுக்கு வலிமை சேர்ப்பதால் முடியுதிர்தலைத் தடுக்கிறது..
இளநரை மற்றும் பொடுகுக்கும் பயனளிக்கிறது..
மேலும், இதனை உட்கொள்ளும்போது,
சரும அழகைக் கூட்டுகிறது.. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது..
உடலின் நச்சுகளை வெளியேற்றி
இரத்தத்தை சுத்திகரிக்கிறது..
கண் பார்வையை அதிகரிக்கி்றது..
உடலின் வெப்பத்தைத் தணிப்பதுடன்,
வியர்வை மற்றும் சிறுநீர்ப் பெருக்கியாகவும் விளங்குகிறது..
செரிமானத்தைக் கூட்டி, பித்தத்தைக் குறைத்து, கொழுப்புகளைக் கரைப்பதால் உடற்பருமனைக் குறைக்கிறது..
மது மற்றும் வைரஸ் கிருமிகளால் ஏற்படும் கல்லீரல் அழற்சிக்கு மற்றும் நோய்களுக்கு பிருங்காதி அருமருந்தாக விளங்குகிறது..
மனதை அமைதிப்படுத்தி, நரம்புகளுக்கு வலிமை சேர்ப்பதால்
மன அழுத்தம், பதட்டநிலை, தூக்கமின்மை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றில் கரிசலாங்கண்ணி பயன்தருகிறது..
நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், மாரடைப்பு, பித்தப்பை அழற்சி, கல்லீரல் நோய்கள், சளி, ஆஸ்துமா என பல நோய்களுக்கு கரிசலாங்கண்ணி பயனளிக்கிறது..
சிறந்த வலி நிவாரணியாக விளங்கும் கரிசலாங்கண்ணி
ஒற்றைத் தலைவலி, காயங்கள், மூட்டு வீக்கம், தசைப்பிடிப்பு ஆகியவற்றில் மேல்பூச்சாக பயன்படுத்தப் படுகிறது..
Disclaimer: கர்ப்ப காலம் மற்றும் பாலூட்டும் போது, கரிசலாங்கண்ணி உட்கொள்ளவதைப் பற்றிய ஆய்வுகள் இல்லாத காரணத்தால், தவிர்ப்பது நல்லது..
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே,
கரிசலாங்கண்ணி பெருமளவு பயன்பாட்டில் இருந்தது என்பதைக் குறிக்கின்றது "கண்ணிக்காணம்" என்ற குறிப்பு..
பல்லவர்கள் ஆண்ட காலத்தில் அரசின் அனுமதியின்றி கரிசலாங்கண்ணியைப் பயிரிட முடியாது ஆண்டு தோறும் அரசுக்கு, வரி செலுத்த வேண்டும் என்பதைக் குறிப்பதாம் அது..
"பொற்றலைக்கை யாந்தகரை பொன்னிறமாகக் கும்முடலை.."
- அகத்தியர் குணபாடம்..
மஞ்சள் கரிசாலையை உட்கொள்ள, உடலுக்குப் பொற்சாயலையும், கண்ணிற்கு ஒளியையும், மனதிற்கு தெளிவையும் உண்டாக்குமாம்..
மூலிகைகளில் தேகசுத்தி மூலிகை, ஞான மூலிகை
என பாராட்டப்படும் கரிசலாங்கண்ணி, வள்ளலார் கண்ட தெய்வீக மூலிகையும் ஆகும்.
கரிசலாங்கண்ணி சாற்றால் வாய் கொப்பளித்து வர பற்களும், ஈறுகளும் சுத்தமாகும். மேலும், தொண்டை நோய்கள் குணமாவதுடன் நுரையீரலும் சுத்தமடையும் என்று கூறியுள்ளார் வள்ளலார்..
King of Hair என அழைக்கப்படும் Bhringraj என்ற கரிசலாங்கண்ணி, உண்மையில் மூலிகைகளில் முடிசூடா மன்னனாகவே விளங்குகிறது..
#இயற்கை_365