Literary Works

#இயற்கை_365 #114

#இயற்கை_365 #114

மூளைக்கும், மற்ற அனைத்து உறுப்புகளுக்கும் பெரும்பலன்களைத் தரும் மூளை வடிவத்திலான வால்நட் என்ற அக்ரூட்டின் தாவரப் பெயர் Juglans regia.
தோன்றிய இடம்: மத்திய ஆசியா..

Juglans regia என்ற தாவரப் பெயர் இலத்தீன் மொழியிலிருந்து வந்ததாகும்..
இராஜ மரியாதை கொண்ட கொட்டை எனும் பொருளை இது தருகிறது..

கடினமான, உருண்டையான, பழுப்புநிற தோல்பகுதிக்குள், ஒளிந்திருக்கும் வெண்மையான, கொழுப்பின் சுவை கொண்ட வால்நட், உடலின் கொழுப்புகள் அனைத்தையும் கரைக்கும் திறன்மிக்கது..

ஆதிமனிதனின் உணவுகளில் முதன்மையான ஒன்றாக விளங்கும் வால்நட் மரத்தில் காய்க்கும் தாவரமாகும்..

வால்நட்டின் கொட்டை, பழம், இலை, மரப்பட்டை ஆகியவை மருத்துவ குணங்கள் நிறைந்தவை..

65% கொழுப்புத்தன்மை உடைய வால்நட்டில்
அதிகளவு கலோரிகள் (650/100g), அதிக புரதச்சத்து, அதிக நார்ச்சத்து, அதிகளவு அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள்,
வைட்டமின்கள் A, E, K, B மற்றும் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், செலீனியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், போரான் ஆகிய கனிமங்களும் உள்ளதால் ஆரோக்கியத்தின் சுரங்கம் என்றே வால்நட் அழைக்கப்படுகிறது..

PUFA என்ற Poly Unsaturated Fatty Acidகளை அதிகளவு கொண்டது வால்நட். ஓமேகா 3 மற்றும் 6 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ள வால்நட்டில் ஒரு நாளின் ALA தேவை பூர்த்தியாகிறது..

Polyphenols, Ellagic acid, Catechin, Melatonin, Phytic acid ஆகிய தாவரச்சத்துகளும் நிறைந்தவை வால்நட்..

உடலிலுள்ள கொழுப்பைக் கரைத்து, ஆரோக்கியத்தை கூட்டுவதால், கொட்டை வகைகளில்
முதலிடம் பெறுகிறது வால்நட்..

உடற்பருமன், இருதய நோய், பக்கவாதம், நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் ஆகிய வாழ்க்கை முறை நோய்களில் வால்நட் பெரிதும் பயனளிக்கின்றது..

"Handful of Walnuts keeps the Heart Diseases away.."
என்பது பிரபலமான ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வாகும்..
நாளொன்றில் ஏழு அல்லது எட்டு வால்நட்கள் வாழ்நாளை நீட்டிக்க போதுமானது என்கிறது இந்த ஆய்வு..

கொழுப்பை எளிதில் கரைப்பதுடன் தூக்கமின்மையைக் குறைத்து, ஞாபகத்திறனை அதிகரிக்கின்றது வால்நட்..

முதுமை, மறதி, மனத்தளர்ச்சி போன்றவற்றிற்கும், வயோதிகத்தில் ஏற்படும் எலும்புப்புரை, தசைசார் வீக்கம், மூட்டு நோய்களுக்குத் தீர்வாகவும் விளங்குகிறது வால்நட்..

இளைஞர்களின் மன அழுத்தம், கோபம், சோர்வு, பதட்டநிலை, குழப்பம் ஆகிய மனநிலைகளிலிருந்து பாதுகாப்பு அளித்து, மகிழ்ச்சியையும், சுறுசுறுப்பையும் கூட்டுகிறது வால்நட் என்கிறது சமீபத்திய அமெரிக்க ஆய்வு..

மேலும் உடலில் நோயெதிர்ப்பு சக்தியையும், புத்துணர்ச்சியையும் அதிகரிக்கின்றது வால்நட்..

வால்நட்டின் உயர்தர ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், விந்தணுக்களை கூட்டி, ஆண்மைத் தன்மையை அதிகரிக்கவும் உதவுகிறது..

மார்பகப் மற்றும் பிராஸ்டேட் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் ஆகியவற்றின் வளர்ச்சி வீரியத்தைக் குறைக்க வால்நட் உதவுகிறது என்று ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது..

வால்நட்டிலிருந்து பெறப்படும் எண்ணெய், மருத்துவ குணங்கள் நிறைந்தது..
இதிலுள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலம், சொறி, படை, சிரங்கு மற்றும் தோல் அழற்சிகளைப் போக்கவல்லது..

சருமத்தில் உள்ள சுருக்கங்களை முற்றிலும் நீக்கி, இளமையான தோற்றத்தையும் தரவல்லது வால்நட் எண்ணெய்..

நாட்பட்ட நுரையீரல் நோய், பால்வினை நோய்கள், காசநோய் போன்றவற்றிற்கும் வால்நட் மருந்தாகிறது.

வால்நட்டின் இலை மற்றும் பட்டை வயிற்றுப்பூச்சிகளுக்கு எதிராக செயல்படும் தன்மை கொண்டவை..

Disclaimer: வால்நட்டின் தாதுப்பொருட்கள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடும்.. அலோபதியில், வால்நட் அலர்ஜி என்பது தனி நோயாகவே கருதப்படுகிறது..

மருத்துவ குணம் அதிகம் நிரம்பிய அக்ரூட் வகை மரங்கள் சீனா, எகிப்து, ஐரோப்பிய நாடுகளிலும், சிக்கிம், நேபாளம் போன்ற ஹிமாலய பகுதிகளில் மட்டுமே விளைகின்றன..

ஒரு வால்நட் மரம் ஏறத்தாழ 250 வருடங்கள் வரை காய்க்கக் கூடியது..

8000 BC முதலே பயன்பாட்டில் இருந்த மரம் வால்நட் என்கின்றனர் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்..

வானுலகிலிருந்து பூமிக்கு கடவுள் நடந்து வந்தபோது, வால்நட் மரங்களில் வசித்ததாக கூறப்படுகிறது..

தன் மீது மீளாக் காதல் கொண்ட கார்யா என்ற நாட்டியப் பெண் இறந்தபிறகு, அவளை கிரேக்க கடவுள் டையோனீசஸ், வால்நட் மரமாகப் படைத்திட அன்றிலிருந்து கலை, ஓவியங்களை வால்நட் மரங்களில் செதுக்கி வருகின்றனர் கிரேக்கர்கள் என்கிறது கிரேக்க இலக்கிய வரலாறு..

கருவுறுதல் கடவுளான ஜூனோவின் வடிவமாகக் கருதப்படும் வால்நட் பழங்களை திருமணத்தின் போது மணமக்கள் மீது எறிவது ரோமானிய வழக்காகும்..

அழியா ஓவியங்களை வரைய, லியானார்டோ டா வின்சி வால்நட்டின் தோல்பட்டைகளைப் பயன்படுத்தினாராம்..

ஆஃப்கன் மொழியில், Chamarghz (மூளையின் நான்கு பகுதிகள்) என்றே வால்நட் அழைக்கப்படுகின்றது..

வசந்த காலத்தை வரவேற்க, புனித நீர் நிரம்பிய குடங்களில் வால்நட்கள் சேர்த்து, சிவ-பார்வதியைத் தொழுகின்ற ஹீராத் என்ற வடக்கு பூஜை காஷ்மீரில் முக்கிய பண்டிகைகளில் ஒன்று..

புதுவருடத்தை வரவேற்க அரிசியுடன் வால்நட் சேர்த்த உணவை பகிர்ந்து கொள்கின்றனர் காஷ்மீரி மக்கள்..

சூப், ஸ்ட்யூ, சாஸ், சாலட், கேண்டி, கேக், ஐஸ்கிரீம் ஆகியவற்றில் பெரிதும் பயன்படுத்தப்படும் வால்நட், இராஜ வம்ச உணவாகவே உலகெங்கும் கருதப்படுகின்றது..

Baklava என்ற மிகப் பிரபலமான உணவு, மத்திய கிழக்கு நாடுகளில் விருந்தோம்பலில் கட்டாயம் இடம்பெறும், உணவாகும்..

இத்தாலியர்களின் Pesto தயாரிக்கவும், பெர்சியர்களின் Fesenjen தயாரிக்கவும் வால்நட்கள் பயன்படுகிறது..

சீனர்களின் செல்வச் செழிப்பை குறிக்கிறது வால்நட்.
Du he tao என சீனர்கள் உருட்டி விளையாடும் தாயங்களாகவும் வால்நட்டுகள் விளங்குகின்றன..

#May_17
உலக வால்நட் தினம்.
உடலுக்கு ஆரோக்கியமும், மனித வாழ்க்கைக்கு வளமும் சேர்க்கும் வால்நட்டுக்கு நன்றிகளை தெரிவிக்கும் நாளாக கொண்டாடப்படுகிறது..

ஆம்..
கையளவு வால்நட்டிலே, கடலளவு ஆரோக்கியம் மச்சான்..

#இயற்கை_365