#இயற்கை_365 #116
#இயற்கை_365 #116
ஆலும், வேலும் மட்டுமன்றி பல்லுக்கு உறுதி தரும் உகாமரம் என்ற மெஸ்வாக்கின் தாவரப் பெயர் Salvadora persica.
தோன்றிய இடம்: பெர்சியா..
"உலகின் முதல் டூத் ப்ரெஷ்கள்" என்ற பெருமைமிக்க, துவர்ப்பு சுவை மிக்க மெஸ்வாக் குச்சிகளுடன்,
இன்றைய பதிவு..
#பல்துலக்கமெஸ்வாக்..!!
Arak, Peelu, Toothbrush tree, Mustard Bush என அழைக்கப்படும் Siwak என்ற மெஸ்வாக், குன்னி மரம் என்றும் உகா மரம் என்றும் தமிழில் வழங்கப்படுகிறது..
ஏழாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, மனிதனின் பற்கள் மற்றும் ஈறுகளை சுத்தப்படுத்த உதவும் மெஸ்வாக், ஒரு சிறிய மரவகைத் தாவரமாகும்..
அராக் என்ற உகா மரத்தின் சிறு கிளைகளே, பல் துலக்கப் பயன்படும் மெஸ்வாக் ஆகும்..
இந்த மரத்தின் சிறு கிளைகள் மட்டுமன்றி இலைகள், வேர்கள், மரப்பட்டை, பூக்கள், காய்நெற்றுகள் ஆகியனவும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை..
Catechin, Caffeine, Carvacrol, Salvadoside, Pinene, Thymol ஆகிய வேதிப்பொருட்கள் நிறைந்தவை மெஸ்வாக் கிளைகள்..
சோடியம், பைகார்பனேட், கால்சியம், ஃப்ளூரைட், சல்ஃபர், குளோரைட் மற்றும் வைட்டமின் சி்உள்ள மெஸ்வாக்கில், Silicon Trimethylamine, Polyphenols, Tannins ஆகிய தாவரச்சத்துகளும் உள்ளன..
பற்களின் ஆரோக்கியத்தை காக்கும் மெஸ்வாக்
பற்சிதைவு, ஈறுகள் வீக்கம், பற்களின் மீது படியும் திட்டுகள் (plaques) ஆகியவற்றை முழுமையாக தடுக்கின்றன..
நுண்ணுயிரிகளால் ஏற்படும் வாய் துர்நாற்றத்தைப் போக்கவல்லது மெஸ்வாக்..
இதிலுள்ள சோடியம் குளோரைடு, சோடியம் பைகார்பனேட், கால்சியம் ஆக்சைடு ஆகியன பற்களின் எனாமலுக்கு வலிமை சேர்ப்பதுடன், பற்களுக்கு பளீர் வெண்மையை அளிக்கின்றன..
மேலும் Resin என்ற பிசின், பற்களின் எனாமல் மீது படிந்து, பற்சிதைவிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது..
கடைப் பற்களின் உமிழ்நீர் சுரப்பியைத் தூண்டுகிறது மெஸ்வாக்கில் உள்ள Tannins..
புகையிலை, காஃபி, டீ ஆகியவற்றினால் ஏற்படும் பற்களின் பழுப்பு நிறக் கறைகளைப் போக்கவல்லது மெஸ்வாக்..
மெஸ்வாக் குச்சிகள் பசியைத் தூண்டச் செய்கின்றன.. மூச்சுக்குப் புத்துணர்ச்சி அளிப்பதுடன் நோயெதிர்ப்பு சக்தியையும் தருகின்றன..
மெஸ்வாக்கின் கந்தகம் மற்றும் ஃப்ளூரைட்
Candida போன்ற பூஞ்சைகளையும், Streptococcus போன்ற பாக்டீரியாக்களையும் தடுக்கின்றன..
மெஸ்வாக்கின் அத்தியாவசிய எண்ணெய்கள் நறுமணமும், துவர்ப்பும், இனிப்பும் சேர்ந்த சுவையைத் தருவதால் செரிமானத்தைக் கூட்டுகின்றன..
Peroxidase, Catalase போன்ற நொதிகள் செல்களின் வீக்கத்தைக் குறைத்து, புற்றுநோய்க்கு எதிராக பயனளிக்கிறது..
குரல் வளத்தையும், கண்பார்வையையும் கூட்டுகிறது.
ஐக்கிய அரபி நாடுகள், எகிப்து, இந்தியா, பாகிஸ்தான், மலேசியா ஆகிய நாடுகளில் பிரபலமான மெஸ்வாக் குச்சிகளை உலக சுகாதார அமைப்பு 1986 ஆம் ஆண்டு முதலாக பல் சுகாதாரத்திற்கு பரிந்துரை செய்துள்ளது..
ஒருநாளில் ஐந்து முறையேனும் மெஸ்வாக் குச்சிகளைப் பயன்படுத்த வலியுறுத்துகிறது International Journal of BioPharma Research..
மெஸ்வாக்கின் இலைகள் வலி நிவாரணியாகவும், சிறுநீர்ப் பெருக்கியாகவும், மலமிளக்கியாகவும் பயன்படுகின்றன..
இதன் மரப்பட்டைகளும் வேர்களும் வயிற்று அழற்சி, தோல் நோய், வலிப்பு நோய், மாதவிடாய் நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது..
மெஸ்வாக் விதைகள் மற்றும் காய்நெற்றுகள் மூட்டு வீக்கம், தோல் அழற்சி ஆகியவற்றில் பயன்தருகின்றன..
Disclaimer: பற்களின் உட்புறம் முழுமையான பலன்களை இந்த நேராக அமைந்துள்ள குச்சிகளின் நார்கள் தருவதில்லை என்பது இதன் அசௌகரியங்களுள் ஒன்று..
Gingival recession என்ற முன்பற்களின் தேய்மானத்தை ஏற்படுத்தக் கூடும் என்கின்றன ஆய்வுகள்..
ஏழாயிரம் ஆண்டுகளாக எகிப்து, பாபிலோனிய, கிரேக்க நாகரிகங்களில் மெஸ்வாக் பயன்படுத்தப்பட்டுள்ளது..
மருத்துவ குணங்கள் நிறைந்த, விலைக் குறைவான, எளிதில் கிடைக்ககூடிய மெஸ்வாக் குச்சிகள் இஸ்லாமியர்களுக்கு உகந்ததாக உள்ளது..
Arak அல்லது Peelu என்ற உகா மரங்கள் மட்டுமன்றி, ஆலிவ், பனை, வால்நட், மாதுளை ஆகியவற்றின் கிளைகளையும் மெஸ்வாக் என்றே வழங்குகின்றனர் இஸ்லாமியர்கள்..
உடலுக்கு நன்மைகள் பயப்பதோடு, மனதிற்கு புத்துணர்ச்சி தருகின்றன இந்த ஆன்மீக கிளைகள் என்கிறது இஸ்லாம்..
"Siwak purifies the mouth and mind.. It pleases the Allah.. Let Peace be upon Him.."
என மெஸ்வாக் குச்சிகளைப் பயன்படுத்த அழைக்கிறார் முகமது நபி..
தூங்குமுன், விழித்தெழுந்தவுடன்,
தொழுகைக்கு முன்,
மத சம்பந்தமான நிகழ்வுகளில் கலந்து கொள்ளும்முன், விருந்துக்கு முன், பயணங்கள் மேற்கொள்ளும் முன்பும், பின்பும் இஸ்லாமியர்கள் மெஸ்வாக் பயன்படுத்துகின்றனர்..
"ஆலும் வேலும் பல்லுக்குறுதி.." என்பது நமது பாரம்பரியம்.. மேலும் மருதம், இலந்தை, இலுப்பை, இத்தி, கருங்காலி போன்ற துவர்ப்புத் தன்மையுள்ள மூலிகைக் குச்சிகளையும், அதன் மரப்பட்டைகளையும் பல் துலக்கப் பயன்படுத்தியது பண்டைய தமிழர்களின் மரபு..
இயற்கை தருகின்ற இந்த நலன்களை எல்லாம் மனிதம் மறந்தாலும் அதனை வியாபாரப்படுத்த தவறுவதேயில்லை பன்னாட்டு நிறுவனங்கள்..
ஆலும், வேலும் போலவே மெஸ்வாக் குச்சிகளின் பயன்பாடு குறைந்தாலும், அதன் பலன்களை பேஸ்ட்களில் புகுத்திவிட்டன இந்த நிறுவனங்கள்..
மேற்கத்திய நாடுகளில், "இந்த இயற்கை டூத் பிரஷ்ஷில் உள்ளது அனைத்துப் பயன்களும்.." என்ற விளம்பரத்துடன் வலம் வரும் மெஸ்வாக் குச்சியின் விலை 4 பவுண்டுகள்..!
இயற்கை அளித்துள்ள இனிய, எளிய, அனைவருக்குமான மெஸ்வாக் குச்சிகளுடன் பற்கள் பளிச்சிடட்டும்..
முகமும், மனமும் மலரட்டும்..!!
#இயற்கை_365