Literary Works

#No_Tobacco_Day

"பேரு தான் பொய்யில..
ஆளைக் கொல்றது மட்டும் மெய்யில..!"

#May_31

இன்று உலக புகையிலை எதிர்ப்பு நாள்..!
இந்த ஆண்டு, "Smoking Breaks Hearts..!" என்ற முழக்கத்துடன் புகையிலையை எதிர்க்க அழைப்பு விடுத்துள்ளது உலக சுகாதார அமைப்பு..

உலகளவில் புகைப்பழக்கம், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
உலகளவில் 1.1 பில்லியன் மக்கள் புகையிலையை பயன்படுத்துகின்றனர்..

47% ஆண்களும், 12% பெண்களும் உலகளவில் புகைப்பழக்கத்திற்கு அடிமையாக உள்ளனர்..

நமது நாட்டில், 53% ஆண்களும், 3% பெண்களும் புகைப்பழக்கத்துடன் காணப்படுகின்றனர். இவர்களில்15 முதல் 24 வயதுவரை உள்ளவர்கள் 20%த்தினர்.
25- 44 வயதுக்குள் உள்ளவர்கள் 40%த்தினர்..

இந்தியாவில் பீடி, சிகரெட் புகைப்பது மட்டுமன்றி புகையிலையை மெல்வது, புகையிலை கலந்த பான், பாக்கு, மூக்குப்பொடி ஆகியவற்றை நுகர்வது என பல்வேறு வழிகளிலும் பயன்பாட்டில் உள்ளது இந்த உயிர்க்கொல்லி இலை..!

புகையிலையில் உள்ள நிகோடின், பத்து நொடிக்குள் மூளையை சென்றடைந்து, அங்கு டோப்பமைன் சுரப்பியை அதிகரிக்கிறது..
இதனால் தற்காலிக உற்சாகம், சுறுசுறுப்பு மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது நிகோடின்..

புகையிலையை புகைக்கும்போது, அதிலுள்ள நிகோடின், Pyridine, Collidine, கார்பன் மோனாக்சைடு போன்ற தாதுக்களாக உருமாறி பக்கவிளைவுகளை உண்டாக்குகின்றன..

புகையிலையை ஏன் தவிர்க்க வேண்டும்..?

காரணங்களை புள்ளிவிவரங்களாக அடுக்குகிறது உலக சுகாதார அமைப்பு..

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய உயிர்க்கொல்லியாக உருவெடுத்துள்ளது புகையிலைத் தொற்று என அழைக்கப்படும் Tobacco Epidemic..!

ஆம்..!
ஒவ்வொரு ஆண்டும், ஏழு மில்லியன் உயிரிழப்புகளை உலகளவில் ஏற்படுத்துகிறது புகையிலை..

இவர்களில் ஏறத்தாழ ஒன்பது லட்சம் பேர், புகையிலையைப் பயன்படுத்தாமலே, (Second Hand Smoking) மரணத்தை சந்திக்க நேரிடுகின்றனர்..

மாரடைப்பால் மூன்று லட்சம் உயிரிழப்புகள் ஏற்படுத்துகிறது புகையிலை..

புகையிலையை பயன்படுத்துவதால் ஒவ்வொரு வருடமும் 10 லட்சம் பேரை இந்தியா இழக்க நேரிடுகிறது..!

இவர்களுள் 28%த்தினர் குழந்தைகள் என்ற அதிர்ச்சித் தகவலையும் சேர்த்தே தருகின்றது உலக சுகாதார அமைப்பு..

மறைமுகப் புகை என்ற Passive smokingல் பெண்களும், குழந்தைகளும் பெரிதும் பாதிக்கப்படுவதுடன், செய்யாத தவறுக்கு மரண தண்டனை வரை அனுபவிக்க நேரிடுகின்றனர்..

உயிரிழப்புகள் ஒருபுறம் இருக்க, உடலின் அனைத்து உறுப்புகளையும், குறிப்பாக இருதயத்தை பாதிக்கின்றது புகையிலை..

"இருதயங்கள் நொறுங்க காதல் தோல்விகள் தேவையில்லை.. புகையிலையே போதுமானது..!"

ஒவ்வொரு சிகரெட்டைப் புகைக்கும் போதும், மாரடைப்பு ஏற்படும் சாத்தியக்கூறுகள் 5% அதிகரிக்கின்றன..

புகையிலையை மெல்பவர்களிடையே இருதய அடைப்பு இருமடங்கு அதிகம் காணப்படுகிறது..

சிகரெட் புகையில் 4800 இரசாயன நச்சுப் பொருட்கள் உள்ளன. அவற்றில் நிகோடின், கார்பன் மோனாக்சைடு, நைட்ரோ பென்சீன், தார் ஆகியவை அட்ரீனலின், நார்-அட்ரீனலின் ஆகிய ஹார்மோன்களை அதிகரித்து, உடலில் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது..

புகைக்கும்போது உண்டாகின்ற கார்பன் மோனாக்சைடு, இரத்தத்தில் ஹீமோகுளோபினுடன் சேர்ந்து, கார்பாக்சி ஹீமோகுளோபினாக மாறிவிடுகிறது. இதனால், இரத்தத்தில் ஹீமோகுளோபினைச் சுமந்து செல்லும் ஆக்சிஜனின் அளவு குறைந்து மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் பத்து மடங்கு கூடுகிறது..

மேலும் இரத்தத்தின் தட்டணுக்களை ஒட்டிக்கொள்ளவும் செய்கிறது..
Thrombus எனப்படும் இரத்த உறைவு இருதயத்தின் இரத்தக் குழாய்களில் ஏற்படுவதாலும் மாரடைப்பு உண்டாகிறது..

அது மட்டுமன்றி நிகோடின் இரத்தக் குழாய்களைச் சுருங்கச் செய்வதால், பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு, கேங்க்ரீன் எனப்படும் கை கால்கள் அழுகும் நிலை ஆகியன ஏற்படுகின்றன..

புகை பிடிப்பதன் மூலம் வாய், நுரையீரல், சிறுநீரகம், மார்பகம் பாதிக்கப்பட்டு புற்றுநோய், ஆஸ்துமா, காசநோய், உயர் இரத்த அழுத்தம், செவிட்டுத்தன்மை, மலட்டுத்தன்மை போன்ற பிற நோய்களும் ஏற்படுகின்றன..

வாய், தொண்டை, நுரையீரல், வயிறு, குடல், சிறுநீரகம், சிறுநீர்ப்பை மற்றும் தோல் புற்றுநோய்கள் ஏற்பட புகையிலை காரணமாக உள்ளது..

"மரணத்தை பெரிதும் தடுக்க முடியும்..
இதனை தவிர்த்தாலே.."
என்ற புகையிலையைத் தவிர்க்க அழைக்கிறது உலக சுகாதார அமைப்பு..

ஏனெனில் புகையிலையைத் தவிர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் பலப்பல..
அதுவும் உடனடியாக..!!

புகைப்பிடிக்கும் போது இதயத்தின் துடிப்பு மிகவும் வேகமாக இருக்கும். ஆனால் அதை நிறுத்திய 20 நிமிடங்களிலேயே, இருதயத் துடிப்பு குறைவதுடன், இரத்த ஓட்டம் மற்றும் இரத்த அழுத்தம் சீராகிறது..

எட்டு மணிநேரத்திற்குள் இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு அதிகரிப்பதுடன், மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் குறைகிறது..

புகைப்பிடிப்பதை நிறுத்திய பன்னிரண்டு மணிநேரங்கள் கழித்து, இரத்தத்தில் உள்ள கார்பன் மோனாக்ஸைடு அளவு குறைந்து, சாதாரண நிலைக்கு உடல் வந்துவிடுகிறது..

இருபத்தி நான்கு மணிநேரங்கள் கழித்து நுரையீரலில் தேங்கியுள்ள நச்சுகள் மற்றும் கார்பன் மோனாக்சைடு முற்றிலும் வெறியேற்றப்படுகிறது..

புகைப்பதை நிறுத்திய மூன்று நாட்களில், சுவாசம் எளிதாகி, நுரையீரல் இயல்புநிலைக்கு திரும்புகிறது..

புகைப்பதை நிறுத்திய 2 வாரங்கள் முதல் 3 மாதத்திற்குள், மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு 50% குறையத் தொடங்குகிறது..

புகைப்பதை நிறுத்திய முதலாம் வருடத்தில், இருதயத்தின் செயல்பாட்டில் நல்ல முன்னேற்றம் ஏற்படுகிறது..

புகைப்பதை நிறுத்திய பதினைந்து வருடங்களில், இருதய நோய் ஏற்படும் வாய்ப்பு அறவே இருக்காது..

66 வயதிற்கு பிறகும், புகைப்பதை நிறுத்திய ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் ஆயுட்காலம் கூடுகிறது என்கிறது உலக சுகாதார அமைப்பு..

புகையிலையை நிறுத்தும் வழிகளும் பலப்பல..

உலர் திராட்சை, நெல்லிக்காய், பேரீச்சை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவை புகையிலையை மறக்க உதவுகின்றன..

மருத்துவரின் ஆலோசனைப்படி Nicotine Replacement Therapy சிகிச்சையைப் பெறலாம்..

மிகக் குறைந்த அளவு நிகோடின் அடங்கிய சூயிங் கம், மிட்டாய்கள், இன்ஹேலர்கள் ஆகியன முள்ளை முள்ளால் எடுக்கும் வழிமுறைகள்..

மேலும் Bupropion போன்ற மருந்துகளும் பயனளிக்கின்றன..

சில ஆண்டுகளுக்கு முன், மிகவும் பிரபலமாக இருந்த E cigarettes பயன்படுத்துவதை தற்சமயம் முற்றிலுமாக நிராகரிக்கிறது உலக சுகாதார அமைப்பு..

ஆனால் புகையிலையை தவிர்ப்பதற்கு மனோதிடம் ஒன்றே போதுமானது..

வாழ்நாளை சேமித்து, வாழ்க்கையை ஆரோக்கியத்துடன் வாழ்ந்திட புகைப்பதை நிறுத்துவோம்..
இன்றும், என்றென்றும்..!! "

"Quit Tobacco Today..!
No 'Ifs and Buts'..!!"

#No_Tobacco_Day..!