#இயற்கை_365 #102
#இயற்கை_365 #102
"வெட்டிவேரு வாசம்..
விடலைப்புள்ளை நேசம்.."
என மனமெங்கும் நறுமணம் வீசும் வெட்டிவேரின் தாவரப் பெயர் Chrysopogon zizinoides.
தோன்றிய இடம்: இந்தியா..
எட்டி நிற்போரையும் கட்டி இழுக்கும் வாசம் நிறைந்த வெட்டிவேரில் தனிச்சிறப்பான மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன..
குளிர்ச்சி தரும் வேர், மனமகிழ்ச்சி தரும் வேர், நாவறட்சியை நீக்கும் வேர், உடல் எரிச்சலைப் போக்கும் வேர் என வெட்டிவேரின் மருத்துவப் பலன்கள் எண்ணிலடங்கா..
Khas khas என வடமொழியிலும், Sunshine என அமெரிக்காவிலும் வழங்கப்படும் வெட்டிவேருக்கு, குரு வேர், விழல் வேர், விரணம், இரு வேலி என்ற வேறு தமிழ்ப் பெயர்களும் உண்டு..
புல் வகையைச் சார்ந்த வெட்டிவேரின் வேர்கள் அடர்த்தியாகவும், ஆழமாகவும் வளரும் தன்மை கொண்டவை..
வெட்டிவேரின் புல்லையும் வேரையும் வெட்டியெடுத்த பின்பும் நடுப்பகுதியான தண்டை மீண்டும் நட்டுப் பயிரிடப்படுவதால், இது வெட்டிவேர் என வழங்கப்படுகிறது..
புற்கள் வகையைச் சேர்ந்த இந்தத் தாவரத்தின் வேர்கள் மட்டுமே மூலிகை மருந்தாகப் பயன்படுகிறது..
Vetivene, Terpinol, Benzoic acid, Selinene, Longipinene போன்ற எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் நிறைந்தது வெட்டிவேர்..
மருத்துவ குணங்கள் நிறைந்த வெட்டிவேர் உணவாக உட்கொள்ளப்படுகிறது..
மேல்பூச்சாக இதன் எண்ணெய் மருந்தாகவும், வாசனை திரவியமாகவும் அரோமா தெரபியிலும் பயன்படுத்தப்படுகிறது..
வெட்டிவேர் நாவறட்சி மற்றும் தாகம் நீக்கும். காய்ச்சல், சளி, அலர்ஜி, வயிற்று அழற்சி, வாந்தி பேதிக்கும் இது அருமருந்தாகும்..
பதட்டநிலை, பயம், மன அழுத்தம் ஆகியவற்றைக் குறைத்து, ஆழ்ந்த தூக்கத்தையும், புத்துணர்ச்சியையும் தரவல்லது வெட்டிவேர்..
ADHD எனும் கவனச்சிதறல் உள்ள குழந்தைகளுக்கு Cognitive Behavioural Therapyயின் ஒரு பகுதியாக, அரோமா தெரபியில் வெட்டிவேரின் எண்ணெய் பெரிதும் உதவுகிறது..
அல்சைமர் மற்றும் பார்க்கின்சன் நோய், வலிப்பு நோய் ஆகியவற்றிலும் வெட்டிவேர் பயனளிக்கிறது..
ஒற்றைத் தலைவலி, நரம்புத் தளர்ச்சி. சிறுநீர்த் தொற்று, மஞ்சள் காமாலை ஆகியவற்றில் பயனளிக்கும் வெட்டிவேர், ஆண்மைத் தன்மையை அதிகரித்து, கருவுறுதல் விகிதத்தை அதிகப்படுத்துகிறது..
அதிமுக்கியமாக, புற்றுநோய் கதிரியக்க மற்றும் கீமோதெரபி சிகிச்சைக்கு பின், உடலுக்கு வலிமை சேர்க்க வெட்டிவேர் பெரிதும் உதவுகிறது..
வெட்டிவேரிலிருந்து பெறப்படும் எண்ணெய், தோல் மற்றும் கூந்தல் பராமரிப்பில் பெரிதும் உதவுகிறது.
தோல் வறட்சியைக் கட்டுப்படுத்துவதுடன் முகப்பரு, தழும்புகள், கரும்புள்ளிகள் ஆகியவற்றை போக்கவும், புற ஊதாக் கதிர்களின் தாக்கத்தைக் குறைக்கவும் இதன் எண்ணெய் பயன்படுகிறது..
Disclaimer: கர்ப்ப காலத்திலும், பாலூட்டும் போதும் வெட்டிவேர் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்..
மன அமைதியையும் உற்சாகத்தையும் அளிக்கும் வெட்டிவேர் துர்சக்தியைப் போக்குவதற்கும், அதிர்ஷ்டம் மற்றும் செல்வச் செழிப்பை பெறுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது..
வெட்டிவேரை பானைத் தண்ணீரில் ஊற வைத்துப் பருகிட, அது குளிர்ச்சியைத் தருவதுடன், சர்க்கரை நோயையும் கட்டுப்படுத்தும் என்பது முன்னோர் உரைத்த மொழி..
சர்பத், ஜூஸ், லஸ்ஸி, மில்க் ஷேக் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் வெட்டிவேரின் பொடி மதுபானங்களில் நறுமணத்திற்காகவும் சேர்க்கப்படுகிறது..
கூரை மற்றும் ஜன்னல் வேயப் பயன்படும் வெட்டிவேரைக் கொண்டு பாய், காலணி, தொப்பி ஆகியனவும் தயாரிக்கப்படுகிறது..
அழகு சாதனப் பொருட்கள், சோப், கூந்தல் எண்ணெய் ஆகியவற்றை தயாரிக்கவும் வெட்டிவேர் பயன்படுகிறது..
பல நூற்றாண்டுகளாக பயன்பாட்டில் இருந்த போதிலும், மண் வளம் பெருக, இந்தியாவில் வெட்டிவேர் பயன்படுத்தப் பட்டது 1980 ஆம் வருடத்தில் தான்..
வெட்டிவேரை ஊடுபயிராக பயிரிட்டால், மண்ணின் கடினத்தன்மையைக் குறைத்து, மண்வளத்தைப் பெருக்கிடும்.. பூச்சிவிரட்டியாகவும் செயல்படும்..
புற்களை வெட்டியெடுத்த பின், வேரை மட்டும் மண் போக நன்கு நீரில் அலசி, உலர்ந்த பின், மருத்துவத் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தப்படுகிறது..
இந்தியா, இலங்கை, ஃபிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் அதிகம் பயிரிடப்படும் வெட்டிவேர் தற்பொழுது அமெரிக்க ஆஸ்திரேலிய நாடுகளிலும் விளைவிக்கப்படுகிறது..
வினைகள் பல தீர்க்கும் வேரான வெட்டிவேருடன் நறுமணமும், புத்துணர்ச்சியும் பெருகட்டும்..
அகமும், புறமும் சிறக்கட்டும்..
#இயற்கை_365..