#இயற்கை_365 #103
#இயற்கை_365 #103
பசி ருசி அறியாது..
ஆனால் பெரும்பசிக்கும் தீர்வாக விளங்கும் ருசியான மரவள்ளிக்கிழங்கின் (Tapioca) தாவரப் பெயர் Manihot esculenta.
தோன்றிய இடம்: பிரேசில்.
ஏழைகளின் இனிய உணவாகத் திகழும் மரவள்ளிக்கிழங்கு, மற்ற கிழங்கு வகைகளைக் காட்டிலும் மருத்துவ குணங்களும் நிறைந்ததாகும்..
ஸ்பானிஷ் மற்றும் போர்ச்சுகீசியர்களால் பிரேசிலிலிருந்து மற்ற நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட மரவள்ளிக்கிழங்கு, தற்போது உலகெங்கும் பயிரிடப்படுகிறது..
Tapioca, Cassava, Sabudina என்ற பெயர்களால் வழங்கப்படும் மரவள்ளியை, குச்சிக்கிழங்கு, குச்சி வள்ளிக்கிழங்கு,
மரச்சினி கிழங்கு என்றும் அழைக்கின்றனர்..
மரவள்ளிக்கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் மாவு Tipioka என தென்னமெரிக்க பழங்குடியினரால் (Tupi) அழைக்கப்பட, அதுவே மருவி, Tapioca ஆனது..
அதிக கலோரிகள் (160/100g), அதிக மாவுச்சத்து, அதிக நார்ச்சத்து உள்ள மரவள்ளிக்கிழங்கில் வைட்டமின்கள் B, A, C, K மற்றும் பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து, மாங்கனீஸ், கால்சியம், செலீனியம் ஆகிய கனிமங்களும் நிறைந்துள்ளன..
Lutein, Flavanoids, Carotenoids ஆகிய தாவரச்சத்துகள், இதன் மருத்துவ குணங்களுக்குக் காரணமாக திகழ்கின்றன..
மரவள்ளிக்கிழங்கில் 88% மாவுச்சத்து உள்ளதால், ஆரோக்கியமான உடற்பருமனுக்கு இது பெரிதும் உதவுகிறது..
இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் ஆற்றல் கொண்ட மரவள்ளிக்கிழங்கு, இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கவும் செய்கிறது..
இது தரும் சீரான இரத்த ஓட்டத்தின் காரணமாக செல்களின் மறுவளர்ச்சி, திசுக்கள் பராமரிப்பு, எலும்பு மற்றும் தசைகளுக்கு வலிமை, ஆகியவற்றிற்கு உதவுகிறது மரவள்ளி..
மரவள்ளிக்கிழங்கு இரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால், வயிற்று அழற்சி, பெருங்குடல் அழற்சி, மலச்சிக்கல், மூலநோய் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது..
மேலும் இரத்தத்தின் சர்க்கரையின் அளவைக் குறைக்கவும் இது உதவுகிறது..
உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் ஆற்றல் கொண்ட மரவள்ளிக்கிழங்கு, குழந்தைகளுக்கு ஏற்படும் Kwashiorkor, Marasmus போன்ற புரதச்சத்து குறைபாடுகளுக்கு தீர்வாக விளங்குகிறது..
PMS மற்றும் மாதவிடாய்ப் பிரச்சனைகளுக்கும்,
மெனோபாஸில் தோன்றும் மன அழுத்தத்திற்கும் இதிலுள்ள வைட்டமின் K, மெக்னீசியம், செலீனியம் உதவுகின்றன..
அல்சைமர் நோய், தோல் அழற்சி, எலும்புப்புரை, மூட்டு வீக்கம், கௌட் நோய், தசை வீக்கம் மற்றும் சிறுநீரக நோய்களிலிருந்தும் மரவள்ளி பாதுகாப்பு அளிக்கிறது..
Disclaimer: மரவள்ளிக்கிழங்கின் இலை, தோல்பட்டை ஆகியவற்றில் Cyanogenic Glucosides, Linamarin போன்ற நச்சுப் பொருட்கள் உள்ளதால், இவற்றை உட்கொண்டால் வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு, மூச்சிரைப்பு, மரணம் கூட ஏற்படலாம்..
தோல் நீக்கிய, நன்கு வேக வைத்த கிழங்கினை மட்டுமே உட்கொள்ள வேண்டும்..
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே, மரவள்ளி பயிரிடப்பட்டதாக வரலாற்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன..
பிரேசிலில், ட்யூபி பெண்ணொருத்தி, பசியினால் உயிரிழந்த தனது மகனை, புதைக்காமல் வீட்டுக்குள்ளேயே வைத்திருக்க, இறந்த மகனை, Manioca என்ற மரவள்ளிக்கிழங்காக மாற்றி உணவுக்கடவுள் அனைவருக்கும் உணவை உருவாக்கித் தந்ததாக நம்பப்படுகிறது..
கேரள மக்களின் தினசரி உணவில் தவறாமல் இடம்பெறும் மரவள்ளிக்கிழங்கிற்கு தனி வரலாறும் உள்ளது..
மரவள்ளிக்கிழங்கினை 17ஆம் நூற்றாண்டில், கேரளாவில் போர்ச்சுகீசியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது..
1876 ஆம் வருடத்தில் ஆசியாவில் நிலவிய கடுமையான பஞ்சத்தின் போது, திருவான்கூர் மகாராஜா மரவள்ளிக்கிழங்கினை கேரளத்தில் பயிரிட்டு நாட்டு மக்களுக்குப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது..
இரண்டாம் உலகப்போரின் போதும், வறட்சியிலும் முக்கிய உணவாகத் திகழ்ந்தது மரவள்ளிக்கிழங்கு தான்..
தென்னிந்தியாவில் குறிப்பாக, கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் அதிகமாக மரவள்ளி பயிரிடப்படுகிறது..
லேசான இனிப்புடன் கூடிய தனிப்பட்ட சுவையினை உடைய மரவள்ளிக்கிழங்கு உணவாக உட்கொள்ளப்படுகிறது..
பதப்படுத்தப்பட்ட மரவள்ளிக்கிழங்கு ஜவ்வரிசி, கோந்து, ஃப்ரக்டோஸ் சாறு, மதுபானங்கள் ஆகியன தயாரிக்கப் பயன்படுகிறது..
Tiquira, Kasiri போன்ற மதுபானங்களைத் தயாரிக்க மரவள்ளிக்கிழங்கு பயன்படுகிறது..
மரவள்ளிக்கிழங்கை சாம்பாரில் சேர்க்கலாம். அல்லது கூட்டு, பொரியலாக செய்யலாம்.
மரவள்ளிக்கிழங்கின் மாவில் தோசை, அடை, உப்புமா போன்ற சிற்றுண்டிகளும், இனிப்பு கார வகைகளும் செய்யலாம்..
Gluten free High Energy Food with Zero Cholesterol என்பதால் உணவியல் வல்லுநர்களால் பெரிதும் பரிந்துரைக்கப்படும் உணவாகவும், திகழ்கிறது மரவள்ளி..
மண்ணுக்குள் விளைகின்ற மரவள்ளி என்ற வைரத்தை வாரம் ஒருமுறையேனும் உட்கொண்டால் ஆரோக்கியம் அனைத்தும் கிடைக்கப்பெறும் என்பதும் உண்மையே..!!
#இயற்கை_365